Yahya

சீதனம் என்ற விஷம் சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்.சீதனத்துக்கு முழுக் காரணம் இளைஞர்கள்... இளைஞர்கள்... இளைஞர்கள்...  என்று சொல்வதை விட பிரச்சினையின்
ஆரம்பம் எங்கிருந்து துவங்குகிறது என்பதை கட்டாயம் தேடிப் பார்க்க வேண்டியுள்ளது.

  சில விமர்சகர்கள்  அனைத்து இளைஞர்களின் பிரச்சினைகளையும் ஒரே கண்ணோட்டத்தில் நோக்குவதாக தெரிகிறது. அது தவறு .அதுமட்டுமின்றி, இந்த சீதனப் பிரச்சினை  தனிமனித பிரச்சினை அல்ல.சமூகப்பிரச்சினையாக நோக்கப்படுகிறது.நமது சமூகத்தில் இருக்க கூடிய மார்க்க வழியில் நடத்திச் செல்லக்கூடிய தலமைகளிடமே உள்ளது. அவர்கள் ஒன்று கூடி சீதனத்தை பற்றி மக்களுக்கு அழகிய முறையில் புரிய வைத்து ,
அதை சமூகத்திலிருந்து அகற்றுவதோடு,அதற்கான மாற்றுத் தீர்வு முறைமையை வலுவாக முன் வைக்க வேண்டும் .

முக்கியமாக இந்த விடயத்தில் உலமா சபையால் மற்றும் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது. சமூகத்தில் இருக்கின்ற அத்தனை ஜமாஅத்துக்களும் சீதனத்தை சமூகத்திலிருந்து ஒழிப்பதற்காக வேற்றுமை மறந்து சமூக நலன் கருதியும்,அல்லாஹ் தடுத்த பெரும் பாவம் என்ற அடிப்படையிலும் ஒன்றினைய வேண்டும்.அதன் மூலம் ஒவ்வொரு ஊர் ஊராக பயான்கள்,பிரச்சாரங்கள்,துண்டுப் பிரசுரங்கள்,பிற தொடர்பு சாதனங்கள் மூலம் விழிப்புணர்வூட்டியும்,அமைப்புக்களிலுள்ள இளைஞர்கள் தைரியமாக முன் வந்து சீதனமின்றி திருமணம் செய்து காட்டுவதன் மூலமும் ஏனைய இளைஞர்களிடம் புரட்சியை ஏற்படுத்த முடியும்.

     சீதனப் பிரச்சினை  நாம் நினைப்பது போன்று சிறிய பிரச்சினை யல்ல. இதில் பொருளாதாரம்,கௌரவம்,பட்டம்,பதவி, நபர்களின் ,குடும்பங்களின் தகுதி போன்றவையுடன் அன்னிய மத கலாச்சாரத்தின் அடிப்படைகளால் பின்னிப் பினைக்கப்பட்ட ஒரு பாரிய பிரச்சினையாகும்.இவற்றுக்கு சில பேர்கள் கூறுவது போன்று இளைஞர்கள் ,ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று கூறுவது மகா முட்டாள் தனமாகும். எந்தவொரு குடும்பத்தை எடுத்துக் கொண்டாலும்,அங்கு திருமணம் என்கின்ற விடயத்தை பற்றி அலசி ஆராய்வது பெற்றோர்களான ஆண்களும் பெண்களுமே.

  சீதனம் என்று வருகின்ற போது பேச்சை எடுப்பது பெண்களாகத்தான் உள்ளனர். இது யாராலும் மறுக்க முடியாது. குறித்த மணமகனின் தாய் மற்றும் சகோதரிகள் ஒரு பெண்ணை பார்த்துவிட்டு அடுத்ததாக கேட்பது வீடு ,நகைகள்,காணி என்று பெண்ணின் வீட்டு சொத்து மதிப்பைத் தான் . இயல்பாக    பெண்களுக்கு இவ்வாறான ரசனைகளை இறைவன் கொடுத்துள்ளான். ஆண் மகன் என்பவன் எப்போதும்  பெண்களை விட பொதுநலமாக யோசிக்க கூடியவனாகவும்,தாய் மீது அதிக பாசம் வைத்துக் கொள்ளக் கூடியவனாகவும் இருப்பதால் அவர்கள் திணிக்கும்  விடயங்களை செய்ய மறுக்கும் போது குடும்பத்தில் பிளவுகள் தோன்றலாம் என்ற அச்சம் காரணமாக விருப்பமில்லாமலேயே ஏற்றுக் கொள்கிறான்.

இன்றைய நிலையில்,சீதனம் வாங்காமல் ஒரு சில இளைஞர்கள் திருமணம் செய்கின்றனர்  என்று வைத்துக் கொள்வோம்.அவர்களில் எத்தனை பேர் குறைந்த பட்ச சீதனமாக மனைவியின் வீட்டில் குடியிருக்கின்றனர் என்று பார்க்கும் போது ,கவலையாக உள்ளது சீதனம் வாங்கவில்லை என்று கூறும் ஆண்களில் அதிகமானோர் மனைவியின் வீட்டிலேயே குடி இருக்கின்றனர்.அது அவர்களுக்கு சீதனமாகத் தெரியவில்லை.வீட்டைத் தவிர்ந்த காணி,பணம் ,பொருள்,வாகனம் போன்றவையே சீதனம் எனக் கருதுகின்றனர்.

இலங்கையின் கிழக்குப் பிரதேசம் ஏனைய பிரதேசங்களிலிருந்து வித்தியாசமானது. இங்கு திருமணம் முடிக்கும் ஆண் மகன் பெண் வீட்டிலேயே தஞ்சமடைகின்ற பழக்கம் உள்ளது. வேறு இடங்களில் ஆண்களே தங்கள் வீட்டில் மனைவியை கொண்டு வைத்து வாழ்கின்றனர்.

  கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு வாழ்வதற்குத் தேவையான வீட்டின் தேவை கட்டாயம் தேவைப்படுவதால் சீதனத்தின் கொடுமை மேலும் சிக்கல் நிலை அடைகிறது. இதன் மூலம் சீதனத்தின் தன்மைகள் ஊருக்கு ஊர் வேறுபடுகிறது. .உண்மையில் எல்லோருக்கும் ஒரே பொருளாதார நிலை இருப்பதில்லை. இது அல்லாஹ்வின் ஏற்பாடு.சமூகத்தில் 10 வீதமான வர்கள் செல்வந்தர்களாக இருக்கும் போது அவர்களுக்கு சீதனம் வாங்காமல் ,தன் பணத்தில் வீடு கட்டி திருமணம் முடித்து கொள்ள முடியும்.அவர்களுக்கு அது பிரச்சினை யாக தோன்றாது. ஆனால் அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு பொருளாதார பிரச்சினை மற்றும் கூடப் பிறந்த சகோதரிகளின் வாழ்க்கை போன்றவற்றை கருத்தில் கொள்ள இருப்பதால் சீதனம் என்பது தவிர்க்க முடியாததாகிறது.

சகோதரிக்கும் வீடு கட்டி தனக்கும் வீடு கட்டி முடிக்க வேண்டும் என்னும் போது அவனு டைய இளமை பருவம் போய் விடும் . இன்னொரு பிரச்சினை என்னவென்றால் ,நமது ஊர்களில் சொத்துப் பங்கீடு செய்யும் போது பெண்ணுக்கு அதிகமும் ,ஆணுக்கு குறைவாகவும் கொடுக்கப்படுகிறது.இதுவும் சீதனம் அதிகரிப்பதற்கான காரணமாகும்.இஸ்லாம் கூறிய வழி முறைகளின் படி சொத்துப் பங்கீடு இருக்குமெனின் ஓரளவு சீதனப் பிரச்சினை யை குறைத்துக் கொள்ள முடியும்.

எல்லாவற்றுக்கும் ஆண்கள் தான் காரணம் என்றுவிட்டு பெண்கள் சும்மா இருந்து விட முடியாது. ஒவ்வொருவருக்கும் பொறுப்புக்களின் அடிப்படையில் அல்லாஹ் நாளை மறுமையில் விசாரனை செய்ய இருக்கின்றான்.திருமணத்தில் மகனை சீதனம் பெற வைத்த தற்கு காரணியாக இருந்த தற்காக தாய்க்கும்,சகோதரிக்கும் விசாரனை உண்டு என்பதை மறவாதீர்கள்.இஸ்லாத்தில் தாயின் பங்கு மிக முக்கியமானது .தன் மக்களை இஸ்லாமிய வழிகாட்டலில் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு தாய்க்குரியது. இஸ்லாமிய நடைமுறைகளை சொல்லிக் கொடுத்து வளர்க்காமல் ,சீதனத்தை வாங்குவதற்கும் தூண்டுதலாக இருந்தால் ,நிச்சயம் அந்தப் பெண் குற்றவாளியே.

சீதனம் வாங்காத மாப்பிள்ளைகள் தான் வேண்டும் என்கின்ற பெண்கள் ஒன்றை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்.அதாவது எனக்கு வரப் போகும் கணவன் பட்டம்,பதவி,பணக்காரன் போன்ற நிலைக்குத் தேவையில்லை. அன்றாடம் கூலி வேலை செய்து குடிசையில் வாழ்க்கை நடத்தும் உண்மையான ஈமானிய இளைஞனாக இருந்தால் போதும் என்று நிய்யத் வையுங்கள். அதற்கு பெண்கள் தயாரா???
அப்படிச் செய்தால் நிச்சயம் சீதனம் இன்றி திருமணங்கள் சிறப்பாக நடைபெறும்.

நமது நாட்டைப் பொறுத்த வரையில் இஸ்லாமிய சட்டம் கிடையாது .அதன் காரணமாக மஹர் கொடுத்து திருமணம் செய்யும் முறையை எமது முஸ்லிம்கள் அன்னிய கலாச்சார ஊடுருவல் காரணமாக மாற்றியமைத்துள்ளனர். சவூதி போன்ற இஸ்லாமிய நாடுகளில் ஆண்கள் திருமணம் முடிப்பதற் கென்று அரசு மாணியங்கள் அடிப்படையில் நிதி வழங்குகிறது. இதன் மூலம் அங்கு மஹர் திருமணங்கள் நடை பெறுகின்றன. அதே போன்றதொரு முறை நிறுவன ரீதியாக இங்கும் தொடக்கி வைக்கப்பட வேண்டும். அதன் மூலம் இளைஞர்களின் திருமணம்,பொருளாதாரம், சொத்துப் பங்கீடு ,சகாத் போன்றன சிறப்பாக மேற் கொள்ளப்படும் பட்சத்தில் சீதனத்தை சமூகத்திலிருந்து துடைத்தெறிய முடியும்.

ஏ.பீ. எம் அஸீம்.

சீதனம் என்ற விஷம் சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும். சீதனம் என்ற விஷம் சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும். Reviewed by Madawala News on 1/07/2018 10:30:00 PM Rating: 5