Yahya

தடம்புரளும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை.


ஏ.பீ.எம்.அஸீம் (சாய்ந்தமருது)

முஸ்லிம் காங்கிரஸ்  தலைவரின் சாய்ந்தமருதுப் பெரிய பள்ளிவாசல் தொடர்பான பேச்சு மிகவும்
கண்டிக்கத்தக்கது. இவ்வாறு பேசியதன்மூலம் தமது தோல்வியை பறைசாற்றியுள்ளமை உறுதியாகிறது.

 ஆரம்பத்தில் சாய்ந்தமருது மக்கள் பிரதேச சபைக்காக போராடியபோது ,"அது முஸ்லிம் காங்கிரசை விரும்பாத ஒரு சிறு குழுவின் செயற்பாடு"என்றுசொல்லி செவிடன் காதில் ஊதிய சங்காய் தட்டிக்கழித்தார்.

காய்ச்சலுக்கு மருந்துகொடுத்தால் குணமாகும் என்பதுபோல "தேர்தல் வந்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்று தப்புக்கணக்குப் போட்டது தலைமை. இதன்மூலம் தங்களது வழமையான ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றலாம் என்று நினைத்தார்கள்.

ஆனால்,இது வெறும் போராட்டமல்ல. நீண்டகால கோரிக்கையை அடைந்துகொள்வதற்கான இலட்சிய வேட்கையில் திளைத்திருக்கும் முழு ஊர் மக்களினதும்  உயிர்மூச்சுடன் சங்கமித்த ஒரு போராட்டம் என்பதை மெல்லமெல்ல காங்கிரஸ் புரிந்துகொண்டது.

உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கல்முனை மாநகரசபையை தாம் கைப்பற்றவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக சாய்ந்தமருதில் களம் அமைக்க முயற்சித்தபோதுதான் மக்களின் வெறுப்புணர்வை நேரடியாக அவர்களுக்கு காணக்கிடைத்தது.

மக்கள் தற்போதிருக்கும்  சூழ்நிலையில் தாம் சொல்லும் எந்தவித ஏமாற்று நாடகங்களோ அல்லது அள்ளிவீசும்  பிச்சைக்காசுகளோ எடுபடாது என்பதை கட்சி சார்பாக நியமிக்கப்பட்ட  வேட்பாளர்களின் பிரச்சாரக் கூட்டங்களும், மக்களின் ஒத்துழைப்பின்மையும் சாட்சிகளாய் அமைந்துள்ளன.

 இந்நிலையில்தான் ஊரின் உரிமையை வெற்றிகொள்வதற்காக ஜனநாயக ரீதியாக  ஒன்றுபட்டுள்ள  மக்களை குழப்புவதற்கும்,பிளவுபடுத்தவும் "சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தை தேர்தல் ஆனையாளர் கலைக்கப் போகிறார்" என்றொரு புரளியை ரவூப் ஹக்கீம் கூறியதாகும்.

உண்மையில், மதஸ்த்தளம்  ஒன்றின்  நிருவாகத்தை கலைப்பதற்கு தேர்தல் ஆனையாளருக்கு எவ்வித அதிகாரமுமில்லை. அதை குறித்த ஆனையாளரே தெரிவித்துள்ளார். அப்படியிருக்க தலைவரின் கருத்து வேடிக்கையும் ,விநோதமும் நிறைந்ததாக பலராலும் நோக்கப்படுகிறது.

இது சாய்ந்தமருது மக்களை ஜனநாயக ரீதியில் தேர்தலில்  எதிர்கொள்ள முடியாமல்  குறுக்குவழிகளைப் பயன்படுத்தி அவர்களது ஒற்றுமையினை சீர்குழைத்து  போராட்டத்துக்கு தலைமை தாங்குபவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம். இதைப்போல இன்னுமின்னும் சதிமுயற்சிகளும், தடைகளும் குறித்த கட்சிக்காரர்களால்  ஏற்படுத்தபடலாம் என்பதில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.

முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சியே இப்போது முஸ்லிம்களின் உரிமையை பறிப்பதிலும், காட்டிக்கொடுப்பதிலும் தனது முழுநேரத்தையும் செலவிடுவதை எண்ணி வெட்கப்பட வேண்டியுள்ளது.

தலைவரின் இவ்வாறான நடவடிக்கைகள் மக்களிடையே ஆதரவைப் பெருக்குவதற்கப்பால்  கட்சிமீதான எதிர்ப்புணர்வை அதிகரிக்கச் செய்துள்ளது. இது நடைபெறப்போகின்ற தேர்தலில் நிச்சயம்  எதிர்தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
தடம்புரளும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை. தடம்புரளும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை. Reviewed by Madawala News on 1/12/2018 09:03:00 AM Rating: 5