Yahya

பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் அரசின் முன்னெடுப்புகள் இதுதான்.



பிணைமுறி மோசடி விவகாரம், பொருளாதார ரீதியில்


நாட்டுக்கு எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் வெளிநாடுகளிலுள்ள விசேட பொருளியல் நிபுணர்களைக் கொண்டே ஆராய்ந்து தெளிவான விளக்கங்களை அனைவருக்கும் வழங்குவது அவசியம்” என அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (10) இடம்பெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து பிணைமுறி அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, “பிணை முறிகள் தொடர்பில் சரியாக அறிந்துகொள்ளக்கூடியவர்கள் அத்துறைசார்ந்தோர் மாத்திரமே. ஏனையோருக்கு இந்த விடயத்தில் போதிய விளக்கம் இல்லை.

 எனவே, முறிகளால் மோசடி இடம்பெற்றுள்ளனவா அல்லது இடம்பெறவில்லையா? அல்லது அவ்வாறு மோசடி இடம்பெற்றிருப்பின் அதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தே சிந்திக்க வேண்டும்” என்றார்.  

இது தொடர்பில், அவர் மேலும் கூறியதாவது,  
“பிணைமுறி மோசடி தொடர்பில் பெரும் சர்ச்சை கிளம்பியதையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவை அமைத்தார். 

“ஆணைக்குழு இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து, நிதர்சனமான கருத்துகள் அடங்கிய அறிக்கையை, ஜனாதிபதியிடம் கையளித்தது. இதனையடுத்து, கடந்த வாரம் ஜனாதிபதி இதனை வெளியிட்டார். இதுவரைக்காலம் இல்லாத வகையில், மிக விரைவில் ஆணைக்குழுவொன்றின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

“பிணைமுறி சர்ச்சை கிளம்பியபோது, ஆணைக்குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என, எதிரணியினர் உள்ளிட்ட சிலர் குறிப்பிட்டனர். இதற்கமைய ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 

“ஆணைக்குழுவின் காலத்தை நீடிப்பது மோசடிகளை மூடி மறைப்பதற்காகவே என்று, அப்போது குறிப்பிட்டனர். ஆனால், தற்போது அறிக்கையும் தயாரிக்கப்பட்டு விட்டது. அது தொடர்பான பகிரங்க அறிப்பையும் ​ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார். 

“எந்தவோர் அரசாங்கத்தினாலும் இதுவரை முன்னெடுக்கப்படாத ஒரு விடயத்தை, ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில், அவசரமாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அறிக்கை தொடர்பில் விவாதம் உடனே நடத்தப்பட வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றனர். நாடாளுமன்றில் சமர்ப்பித்து அதனை வாசித்தறியாமல் விவாதத்தை நடத்த முடியாது எனவும் கருத்து நிலவியது. 

“நாளை நாடாளுமன்றம் கூடவுள்ளதாகவும் பிணைமுறி அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தார். இதனையடுத்து ஜனாதிபதி, நாடாளுமன்றில் அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று, எதிர்வரும் 16ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கிகாரம் பெற்றதன் பின்னர், எதிர்வரும் 17ஆம் திகதியன்று அந்த அறிக்கையை நாடாளுமன்றில் சமர்பிக்க முடியுமென்று, கடிதம் மூலம் பதிலளித்திருந்தார். 

“இவ்வாறான நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடியபோது, பிணைமுறி அறிக்கையைக் கேட்டு, ஒன்றிணைந்த எதிரணியினர் நாடாளுமன்றில் பெரும் குழப்பத்தை தோற்றுவித்தனர். கூச்சலிட்டும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டும் கொண்ட செயலானது, திட்டமிட்டுச் செய்த சதியாகும். 

“இவர்கள், பிணைமுறி அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்த வந்தவர்கள் அல்லர். திட்டமிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த வந்திருந்தனர்” எனக் குறிப்பிட்டார். 
மேலும், “1,257 பக்கங்கள் கொண்ட பிணைமுறி அறிக்கையை, மும்மொழிகளிலும் மொழிபெயர்க்க நீண்ட காலம் எடுக்கும். இதனால், குறித்த அறிக்கையை இணையத்தில் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை, பொதுமக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகையதொரு செயற்பாட்டை, இதற்கு முன்னர் ஆட்சி செய்த அரசாங்கத்தினர் மேற்கொள்ளவில்லை.  

“சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் காலத்திலும் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், எந்தவோர் அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அரசாங்கம் மீது குறை கூறுவதையிடுத்து உண்மையில் பிணைமுறி மோசடியால் நாட்டின் பொருளாதாரத்துக்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை அனைவரும் அறிந்துகொள்ளுதல் வேண்டும்.  

“கோப் குழுவுக்கோ ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கோ போதிய நிபுணத்துவம் இல்லை. இதனால் வெளிநாட்டு நிபுணர்களைக்கொண்டு நாட்டுக்கு எத்தகைய பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும். உலக நாடுகள் பலவும், இதனை அவதானித்துக்கொண்டு இருக்கின்றன” என, அமைச்சரவை ​​பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார். 
பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் அரசின் முன்னெடுப்புகள் இதுதான். பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் அரசின் முன்னெடுப்புகள் இதுதான். Reviewed by Euro Fashions on 1/11/2018 06:16:00 AM Rating: 5