Yahya

அரசியல்கட்சியும் , நன்றிகெட்ட ஊர்களும்.ஏ.பீ.எம் அஸீம். (சாய்ந்தமருது)

அரசியலில்  மிக இழிந்த செயலாக பார்க்கப்படுவது  ஒரு அரசியல்வாதியோ அல்லது கட்சியோ   குறித்த
ஒரு பிரதேசத்தில் தமது செல்வாக்கிற்கு  ஆப்பு உருவாகின்றபோது ,அதற்கான காரணத்தை இனங்கண்டு சரிசெய்யாமல்  முன்னர் தாம்செய்த சேவைகளை சொல்லிக்காட்டி ஊரை திட்டுவதாகும்.

இது அரசியல்ரீதியாக வங்குரோத்து அடைந்தவர்களின் இறுதிக்கட்ட செயற்பாடு என்றே சொல்லவேண்டியுள்ளது. தனிப்பட்டவகையில் இலாபம் அடையக்கூடியவர்களின் சட்டைப்பையை நிரப்பக்கூடிய ஒண்டிரண்டு திட்டங்களை செய்துவிட்டு ஒரு ஊரினுடைய தலையில் போடுவது எந்தவிதத்தில் நியாயமாகும்?

பொதுவாக தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் மக்களிடம்  தைரியமாகச் சென்று முகத்தைப் பார்த்து வாக்குக்கேட்கக்கூடிய வல்லமை ஒவ்வொரு அரசியல் கட்சியிடமும் இருக்கவேண்டும்.அதையே மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

மக்கள் கேட்கின்ற அபிவிருத்தியை செய்துகொடுக்காமல் ,தான் விரும்புகின்ற அல்லது தனது சகாக்கள் விரும்புகின்ற ஒரு செயலை முழு ஊருக்குமான அபிவிருத்தியாக காட்டுவது மக்கள்மீதான அபிவிருத்தித் திணிப்பாகும்.

இதன்மூலம் மக்களின் அபிலாசைகள் ஒருபோதும்  நிறைவேற்றப்படாது என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் தனித்துவக் கட்சி என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் தரப்பினர் தற்போதைய தேர்தலை நெஞ்சுறுதியுடன் எதிர்கொள்வதில் தொண்டையில் சிக்கிய முள்ளைப்போன்று அவதியுறுவதைக் காணமுடிகிறது. தாங்கள் செய்தது என உரிமைகோருவதற்கு எந்த வேலைத்திட்டங்களும் இல்லை.ஒவ்வொரு ஊருக்கும்  சென்று  சந்தர்ப்ப சூழ்நிலைகளை சமாளிப்பதற்காக சாணாக்கியமாக கூறப்பட்ட வாக்குறுதிகள் இறுதியில் தங்களின் கழுத்துக்கே சுருக்கு கயிறாக மாறுமென்று கனவில்கூட நினைத்திருக்கமாட்டார்கள்.

இது மக்களின் நிறைவேற்றப்படாத நீண்டகால கோரிக்கைகளும் ,எதிர்பார்ப்புக்களும் விரக்தியடைந்து  குறித்த கட்சியினருக்கெதிரான ஒன்றுபட்ட எதிர்ப்பலையாக மாற்றமடைந்துள்ளது.

சில ஊர்களில் அக்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தாங்கள் செய்த அபிவிருத்திகளை பட்டியலிட்டு ,"ஊரவர்கள் நன்றி கெட்டவர்கள்" என்று வியாக்கியானம் செய்வதாக சொல்லப்படுகிறது.உண்மையில் அபிவிருத்தி நடந்திருந்தால் இவர்கள் வாயால் சொல்லவேண்டியதில்லை.மக்களே சாட்சியாக இருந்திருப்பார்கள்.அபிவிருத்திகளால் ஊரே அலங்கரித்திருக்கும்.ஆனால் கல்முனையும் அதனோடு இணைந்த ஏனைய ஊர்களும் எந்தவித வளர்ச்சியுமின்றி கடந்த 17 வருடங்களாக முடங்கிப்போயுள்ளது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் சில அபிவிருத்தித் திட்டங்கள்கூட  பூரணமாக முடிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலுள்ளது. சில திட்டங்கள்  அடிக்கல் வைத்து மூடப்பட்டதோடு  அதன்மேல் புற்கள் முளைத்துக் காணப்படுகின்றன.

ஊர்களினுடைய நிலை இப்படியிருக்க ,அவர்களை நன்றி கெட்டவர்கள் என்று சொல்வது வேடிக்கையாகும்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் மக்களிடம் எவ்வகையான கதைகளைச் சொல்லி வாக்குக்கேட்கலாம் என்று மட்டும் சிந்திக்கத் தெரிந்த தலைமைக்கு "சாணக்கியர்" என தன்னையே அழைத்துக்கொள்ளும் உரிமை உண்டெனில் ,மக்கள் தங்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக புதுத் தலைமையொன்றின் கீழ் ஒன்றினைவது அரசியலில் புதுப் பாதையை தெரிவுசெய்வதற்கான வியூகம் என்று சொல்லலாம்.  

அரசியலில் சாணாக்கியம் தேவை என்பதை அடிக்கொருமுறை கூறிவரும் தலைமை, தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதற்கு பழைய பல்லவியே போதும் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறொன்றும் கிடையாது.
அரசியல்கட்சியும் , நன்றிகெட்ட ஊர்களும். அரசியல்கட்சியும் , நன்றிகெட்ட ஊர்களும். Reviewed by Madawala News on 1/06/2018 11:47:00 AM Rating: 5