Yahya

பேஸ்புக்கில் பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினையுடன் புதுவருட வாழ்த்து தெரிவித்த இருவர் கைது.


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினை அடங்கிய 2018 புது வருட வாழ்த்துக்களை முகப் புத்தகம் ஊடாக தயார் செய்து அதனை பகிர்ந்ததாக கூறப்படும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

2007 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதிவிதானங்களுக்கு அமைவாக இவ்விருவரும் கைது செய்யப்பட்டு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

செவன் தினேஷ் குமார், விஜேகுமார் விதூஷன் ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புலிகள் இயக்க தலைவரின் புகைப்படம், இலட்சினை மற்றும் கருத்துக்கள் ஊடாக தமிழ் சிங்கள மக்களிடையே மோதல், வெறுப்புணர்வு, அமைதியினமையை ஏற்படுத்த சந்தேக நபர்கள் முனைந்துள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இரத்தினபுரியைச் சேர்ந்த எதிரிமுனி பெத்தும் ரசங்க என்பவர் இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புத்திக சிறிவர்தனவுக்கு , இந்த பேஸ்புக் விவகாரம் தொடர்பில் முறைப்பாடளித்துள்ளார். குறித்த நபர் செய்த முறைப்பாடு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரினால், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயங்கரவாத புலனாயவுப் பிரிவுக்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா ஆகியோரின் மேற்பார்வையில் பயங்கரவாத புலனாயவுப் பிரிவின் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ.ஏ. ஜகத் விஷாந்தவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் பரிசோதகர் கபில தலைமையிலான குழுவினர் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதனையடுத்தே இந்த இருவரும் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

 புலிகளின் தலைவர் வேலுப் ள்ளை பிரபாகரனின் புகைப்படம் மற்றும் புலிகளின் இலட்சினையை பயன்படுத்தி தயார்ச் செய்யப்பட்ட 2018 புத்தாண்டு வாழ்த்தினை காட்சிப் படுத்தியதுடன் அதனை பகிர்ந்துள்ளதாக கூறி முறைப்பாட்டாளரான எதிரிமுனி பெத்தும் ரசங்க, விதூஷன் அல்லது விதோஷன் ரொக்ஸி எனும் முகப்புத்தக பெயரை உடையவருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.

 இந் நிலையிலேயே முகப்புத்தகம் ஊடாக இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதூடாக சிங்கள - தமிழ் சமூகங்களிடையே வேற்றுமைகளை மேலெழச் செய்து, ஒருமைப்பாட்டை பாதிக்கும் வண்ணம் நடந்துகொண்டமை, நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை, அமைதியினமையை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டமை போன்ற காரணங்கள் மீது அவதானம் செலுத்தி விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

 விசாரணைகளை ஆரம்பித்த பயங்கரவாத புலனாயவுப் பிரிவு, விதூஷனின் முகப்புத்தகம் ஊடாக செய்த விசாரணைகளில் தினேஷ் குமார் எனும் மற்றொரு நபரையும் அடையாளம் கண்டு அவரது முகப் புத்தகம் சார் தகவல்களை மையப்படுத்தியும் விசாரணை செய்துள்ளது.

 இதன் போது தினேஷ் குமாரின் முகப்புத்தகத்தில், பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினை, சீருடையில் இருக்கும் புலித் தலைவர்களின் படங்கள், தமிழீழ வரைப் படத்தை பிரதிபளிக்கும் இலங்கை தேசப்படம் உள்ளிட்டவை பயங்கரவாத புலனயவாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 2007 ஆம் ஆண்டின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச ஒருமைப்பாட்டு சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தினேஷ் குமாரையும், விதூஷனையும் கைது செய்து நீதிமன்ரில் ஆஜர் செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
பேஸ்புக்கில் பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினையுடன் புதுவருட வாழ்த்து தெரிவித்த இருவர் கைது. பேஸ்புக்கில்  பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினையுடன் புதுவருட வாழ்த்து தெரிவித்த இருவர் கைது. Reviewed by Madawala News on 1/09/2018 11:20:00 AM Rating: 5