Yahya

சவூதி அரேபியாவின் பெண்கள் உரிமை வரலாற்றில் மற்றுமொரு மைல் கல். (படங்கள்)


சவூதிய அரேபியாவின் வரலாற்றில் முதன் முறையாக விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கங்கள் பெண்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது, இந்த அபூர்வ நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

சவூதி அரேபியாவில் பெண்களுக்கான உரிமைகள் மெல்ல மெல்ல வழங்கப்பட்டு வருகின்றன, சவூதி அரேபிய பெண்கள் வாகனமோட்டுவதற்கான அனுமதி அண்மையில் வழங்கப்பட்டிருந்தது, சினிமா திரையரங்கம் அமைப்பதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கம் அண்மையில் வழங்கியிருந்தது, அதனை தொடர்ந்து பெண்கள் மட்டும் நடத்திச்செல்லகூடிய வாகன விற்பனை நிலையமொன்றும் கடந்த வாரம் சவூதி அரேபியாவில் திறக்கப்பட்டிருந்தது. இங்கு முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே வேலை செய்வார்கள்.

இப்படியான திட்டங்களின் வரிசையில் இன்று பொது விளையாட்டு மைதானங்களின் கதவுகளும் அவர்களுக்காக திறந்து விடப்பட்டிருக்கின்றது.

ரியாத்தில் அல் அஹ்லி கால்பந்து கழகத்திற்கும் அல் பத்தீன் கால்பந்து கழகத்திற்கும் இடையில் இன்று நடைபெறும் முதல் போட்டியின் மூலம் அவர்களுக்கான சுதந்திரம் வழங்கப்படுள்ளது.

நாளை ஜித்தாவிலும் எதிர்வரும் 18ம் திகதி தம்மாமிலும் அவர்களுக்கான கதவுகள் திறக்கப்படவிருக்கின்றன.

இதுவரை காலமும் மைதானத்திலுள்ள பார்வையாளர் அரங்கிற்கு ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் பெண்கள் வீட்டில் இருந்தே போட்டிகளை கண்டுகளிக்க வேண்டுமாக இருந்தது.

பார்வையாளர் அரங்கத்தில் ஆண்களுக்கான இடம், பெண்களுக்கான இடம், குடும்பத்தினருக்கான இடம் என பிரிக்கப்பட்டு இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன மூன்று தரப்பினரும் வெளியேறுவதற்கு வெவ்வேறு கடவைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன,

பெண்களுக்கான தொழுகை இடங்கள், ஓய்வறை என்பன தனித்தனியாக அமைக்கப்பட்டு அவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கான நுழைவு வாயில்களில் பெண்களே காவல் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவின் வரலாற்றில் இது ஒரு முக்கிய பரிணாம வளர்ச்சியாக கொள்ளப்படுகின்றது.

By: Razana Manaf-


சவூதி அரேபியாவின் பெண்கள் உரிமை வரலாற்றில் மற்றுமொரு மைல் கல். (படங்கள்) சவூதி அரேபியாவின் பெண்கள் உரிமை  வரலாற்றில் மற்றுமொரு மைல் கல். (படங்கள்) Reviewed by Madawala News on 1/12/2018 11:41:00 PM Rating: 5