நக்கில்ஸ் மலைத் தொடரில் கொட்டகை அமைத்து தங்கி இருந்த 23 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் கைது.



கண்டி- மாத்தளை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நக்கிள்ஸ் மலைச்சாரலில் தற்காலிக கொட்டகை அமைத்து தங்கி இருந்த 23 இளைஞர் யுவதிகள் உண்ணஸ்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேற்படி பாதுகாப்பு வனப்பிரதேசத்தில் தீ மூட்டுவது தடை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனுமதி இன்றி வனப்பிரதேசத்தில் பிரவேசித்து கூடாரம் அமைத்து அடுப்பு ஒன்றை உருவாக்கி தீ மூட்டியுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள், பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய ஒருவர் மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் எனப் பலதரப்பினர் உள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது. இவர்கள் பண்டாரவல, கொழும்பு, பதுளை, கண்டி உற்பட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் முகப்புத்தகம் மூலம் இணைந்து மேற்படி விருந்துபசாரம் மற்றும் கச்சேரி நடத்தியுள்ளதாக தெரிய வருகிறது.


இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட உள்ளதாக மேலும் தெரிய வருகிறது.


அதேநேரம் நக்கில்ஸ் மலைத் தொடரில் அடிக்கடி காட்டுத் தீ பரவல் ஏற்படுவதாகவும் அதற்கு தீயணைப்பு தொகுதிகள் பரவலாக்கப்பட வேண்டும் என பன்வில பிரதேச செயலாளர் நெரஞ்சன் சேனாதீர கண்டி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்
நக்கில்ஸ் மலைத் தொடரில் கொட்டகை அமைத்து தங்கி இருந்த 23 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் கைது. நக்கில்ஸ் மலைத் தொடரில் கொட்டகை அமைத்து தங்கி இருந்த 23 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் கைது. Reviewed by Madawala News on May 14, 2024 Rating: 5

பாராளுமன்றில் பலஸ்தீன சால்வையை அணிந்தார் சஜித் .



ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவர் பலஸ்தீன கொடி மற்றும் இலங்கையின் தேசிய கொடி ஆகிய இரண்டு கொடிகளும் பொறிக்கப்பட்ட சால்வை அணிந்துள்ளார்.


பாராளுமன்றத்தில் இன்று (14), பலஸ்தீனம் மீதான தாக்குதல் தொடர்பிலான ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பிரேரணை முன்வைத்து உரையாற்றினார். அதனை, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் வழிமொழிந்து உரையாற்றினார்.

பாராளுமன்றில் பலஸ்தீன சால்வையை அணிந்தார் சஜித் . பாராளுமன்றில் பலஸ்தீன சால்வையை அணிந்தார் சஜித் . Reviewed by Madawala News on May 14, 2024 Rating: 5

கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு கல்முனையில் நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.



பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு  பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி  தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த  சம்பவம் இன்று (14) காலை  எட்டு முப்பது மணிக்கு   இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் காணாமல்  அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி  ஆகியோருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு குறித்த நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.


இதன் போது  கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன்  ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஏற்பாட்டில்  அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம்  பொதுமக்களுடன் இணைந்து   முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது.


எனினும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் கல்முனை நீதிவான்  நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து  தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் என்பவருக்கு தடை உத்தரவு உள்ளதாகவும் எனவே  முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக ஏற்பாடு செய்துள்ள  குறித்த நிகழ்வினை   நிறுத்துமாறு கூறி   தடை உத்தரவை வழங்கினர். அத்துடன் ஏனைய அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி  ஆகியோருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவ்விடத்தில் இருந்து செல்லுமாறு எச்சரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


இது தவிர கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு  முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில்   மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால்  கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு கல்முனையில் நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டனர். கஞ்சி  தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு கல்முனையில் நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டனர். Reviewed by Madawala News on May 14, 2024 Rating: 5

பெண் சிறைக்காவலர் ஒருவரை கொலை செய்ய, சிறையில் உள்ள பெண் கைதி ஒருவருக்கு கன்ட்ரகட் வழங்கிய மற்றுமொரு பெண் சிறைக்காவலர் #இலங்கை



காலி சிறைச்சாலையின் பெண் சிறைக்காவலர் ஒருவர் அதே சிறைச்சாலையில் பெண் சிறைக்காவலர் ஒருவரை கொலை செய்ய ஒப்பந்தம் வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸ் முறைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது.


பல்வேறு குற்றச் செயல்களுக்காக காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதி ஒருவருக்கே சிறைச்சாலை அதிகாரி இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிறைக்காவலரைக் கொல்வதற்கான ஒப்பந்தத்தை சிறைக்காவலர் தனக்கு வழங்கியதாக அந்த கைதி  பெண் மற்றொரு பெண் கைதியிடம்  கூறியதை அடுத்து விஷயம் வெளியாகியுள்ளது.



இதுகுறித்து சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் சிறைக்காவலர் ஒருவரை கொலை செய்ய, சிறையில் உள்ள பெண் கைதி ஒருவருக்கு கன்ட்ரகட் வழங்கிய மற்றுமொரு பெண் சிறைக்காவலர் #இலங்கை பெண் சிறைக்காவலர் ஒருவரை கொலை செய்ய, சிறையில் உள்ள பெண் கைதி ஒருவருக்கு கன்ட்ரகட் வழங்கிய மற்றுமொரு பெண் சிறைக்காவலர் #இலங்கை Reviewed by Madawala News on May 14, 2024 Rating: 5

அக்குறனை அப்துல் ரஸ்ஸாக் பாத்திமா ஷப்னா இர்ஹாம் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.



அக்குரணை, பங்கொள்ளாமடயை சேர்ந்த அப்துல் ரஸ்ஸாக் பாதிமா ஷப்னா இர்ஹாம் 2024.05.06 இலங்கை சோஷலிச ஜனநாயகக் குடியரசின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக உயர் நீதிமன்றில் நீதியரசர்கள் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.


இவர் தனது ஆரம்பக் கல்வியை க/ மாவதுபொல முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் க/ மல்கமென்தெனிய முஸ்லிம் வித்தியாலயத்திலும் பெற்றார்.


பின் தனது உயர் கல்வியை க/ அஸ்ஹர் தேசிய பாடசாலையில் கற்றதுடன் இவர் பேராதனை பல்கலைக் கழகத்தின் பொருளியலில் இளங்கலைமாணி சிறப்புப் பட்டதாரியும் ஆவார்.


எதிர்வரும் காலங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ் இவரது அனைத்து கனவுகளையும் சிறந்த வழிகாட்டுதலுடன் நனவாக்கி தனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள ஒரு பெண்ணாக எபபொழுதும் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.*
அக்குறனை அப்துல் ரஸ்ஸாக் பாத்திமா ஷப்னா இர்ஹாம் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அக்குறனை அப்துல் ரஸ்ஸாக் பாத்திமா ஷப்னா இர்ஹாம் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். Reviewed by Madawala News on May 14, 2024 Rating: 5

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு - இருவர் கைது #சம்மாந்துறை



பாறுக் ஷிஹான்

வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை கடத்திய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரின் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது கடந்த சனிக்கிழமை (11) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அச்சந்தேக நபரிடம் பொலிஸார் முன்னெடுத்த மேலதிக விசாரணையில் பொத்துவில் பிரதேசத்தில் மற்றொரு சந்தேக நபர் தலைமறைவாகி இருப்பதாக தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

இது தொடர்பாக பொத்துவில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை(12) திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை மீட்கப்பட்டதுடன் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு - இருவர் கைது #சம்மாந்துறை திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு - இருவர் கைது #சம்மாந்துறை Reviewed by Madawala News on May 13, 2024 Rating: 5

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு



பாறுக் ஷிஹான்

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு திங்கட்கிழமை(13) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய 4 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன் போது கடந்த தவணைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்று மன்றில் ஆஜராகி இருந்தனர்.பின்னர் இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கபட்டு எதிர்வரும் மே மாதம் 27 திகதி வரை வழக்கினை ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தியின் பின்னணி

13 வயது சிறுவன் சடலமாக மீட்பு-குர்ஆன் மதரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்

13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (5) மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த மாணவனே தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.

இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

மேலும் குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரால் மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல என கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவு Reviewed by Madawala News on May 13, 2024 Rating: 5

T20 உலகக் கிண்ண தொடருக்கு அமெரிக்கா செல்லும் இலங்கை அணி சக்தி வாய்ந்தது - எந்த அணிக்கும் சவால் விடுமளவு நல்ல நிலையில் உள்ளது ; தேர்வுக் குழுத் தலைவர் உபுல் தரங்க



2024 ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணிக்கான வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​பாரபட்சம் பார்ப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் உபுல் தரங்க, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் எந்த அணிக்கும் சவால் விடுமளவு இலங்கை அணி நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.


உலகக் கோப்பைக்கான இலங்கை டி20 அணி தொடர்பான பல்வேறு விசனங்களை நிவர்த்தி செய்ய நடைபெற்ற ஊடக சந்திப்பில், வீரர்களின் திறமை, உடற்தகுதி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைத் தவிர தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை என்று தரங்க கூறினார்.

உலகக் கோப்பைக்காக பெயரிடப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணி சமநிலை மற்றும் சக்தி வாய்ந்தது என்றார்.

அணித்தலைவர் வனிந்து ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன பற்றிய காயம் குறித்த கவலைகளுக்கு பதிலளித்த தரங்கா, இரண்டு வீரர்களும் போட்டிக்கு தகுதியானவர்கள் என்று கூறினார்.


துனித் வெல்லலகே அணியில் சேர்க்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​தரங்க அவரது ஓல்ரவுண்ட் செயல்திறன் மற்றும் அமெரிக்காவில் உள்ள நிலைமைகளில் அணிக்கு சாத்தியமான நன்மை இருப்பதாக எடுத்துரைத்தார்.

"துனித் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர், அவரை முதல் 6 ஓவர்களில் கூட பயன்படுத்த முடியும்," என்று கூறினார்.

பானுக்க ராஜபக்சவைத் தேர்ந்தெடுப்பது குறித்து தெரிவிக்கையில், அனைத்து தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தலைவருடன் விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவே இது என்று விளக்கினார்.

"தனஞ்சய ஒரு நல்ல ஆல்-ரவுண்டர், எனவே அவரை பானுகாவுக்கு பதிலாக சேர்க்க நாங்கள் தேர்வு செய்தோம்," என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அணியில் மூன்று முக்கிய ஓல்ரவுண்டர்களான தனஞ்சய, அஞ்சலோ மத்யூஸ் மற்றும் தசுன் ஷானக்க ஆகியோரைப் பயன்படுத்துவது குறித்து கேட்டபோது, ​​தனஞ்சய டி சில்வாவை விட மத்யூஸ் மற்றும் ஷானக்கவுக்கு விளையாடும் 11 பேருக்கான முன்னுரிமை வழங்கப்படும் என்று தரங்க கூறினார்.

குசல் ஜனித் பெரேரா அணியில் இல்லாதது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த தலைமை தேர்வாளர், அவரது திறமை இருந்தபோதிலும் சமீபத்திய ஆட்டத்தை மேற்கோள் காட்டி வருத்தம் தெரிவித்தார்.

குசல் மற்றும் பானுகா அணியில் சேர்க்கப்படாத போதிலும், குசல் மெண்டிஸ், பதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்கா மற்றும் தசுன் ஷனக போன்ற வீரர்களுடன் அணியின் வலுவான பேட்டிங் வரிசையை தரங்கா வலியுறுத்தினார்.

மதீஷ பத்திரனவின் காயம் குறித்து தரங்கா கூறுகையில், பத்திரன முழுப் போட்டியிலும் பங்கேற்கலாம் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன என தெரிவித்தார்.

விஜயகாந்த் வியாஸ்காந்தைச் சேர்ப்பது பற்றிப் பேசுகையில், மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடும் சூழ்நிலையில் அவர் பயனுள்ள தேர்வாக இருப்பார் என்று தேர்வாளர்கள் நம்பினர் என அவர் கூறினார்.

சுழற்பந்து வீச்சாளர்களான அகிலா தனஞ்சய மற்றும் ஜாஃப்ரி வான்டர்சே ஆகியோருடன் ஒப்பிடும்போது வியாஸ்காந்தின் வலுவான ஆட்டமே அவரை ட்ராவிலிங் ரிசர்வ் ஆக சேர்க்க ஒரு காரணம் என்று தேர்வாளர் அஜந்த மெண்டிஸ் கூறினார்.

அணிக்கு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும்போது தேர்வாளர்கள் ஒழுக்கத்தை கவனிக்கவில்லையா என்று கேட்டபோது, ​​தரங்க அவற்றை மறுத்து, ஒழுக்கம் ஒரு முக்கியமான காரணி என்றார்.

"வீரர்கள் எங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அவர்களின் ஒழுக்கத்தை நாங்கள் கருதுகிறோம், மேலும் எந்தவொரு தவறான நடத்தையும் அணியை மட்டுமல்ல, நமது நாட்டின் நற்பெயரையும் பாதிக்கும்" என்று தரங்க உறுதிப்படுத்தினார்.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024க்காக இலங்கை அணி நாளை அமெரிக்கா செல்கிறது.
T20 உலகக் கிண்ண தொடருக்கு அமெரிக்கா செல்லும் இலங்கை அணி சக்தி வாய்ந்தது - எந்த அணிக்கும் சவால் விடுமளவு நல்ல நிலையில் உள்ளது ; தேர்வுக் குழுத் தலைவர் உபுல் தரங்க T20 உலகக் கிண்ண தொடருக்கு அமெரிக்கா செல்லும் இலங்கை அணி சக்தி வாய்ந்தது - எந்த அணிக்கும் சவால் விடுமளவு நல்ல நிலையில் உள்ளது ; தேர்வுக் குழுத் தலைவர் உபுல் தரங்க Reviewed by Madawala News on May 13, 2024 Rating: 5

உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக்கொண்ட நபர் இரண்டு மாதங்களில் உயிரிழப்பு



அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக்கொண்ட நபர் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கடந்த மார்ச் மாதம் பன்றியின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்பட்டது.



ரிக் ஸ்லேமேன் என்ற 62 வயதுடையவரே உலகில் முதன்முதலாக பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக்கொண்டவராவார்



பாஸ்டன் நகரிலுள்ள மாசசூசெட்ஸ் பொது வைத்தியசாலையில் சுமார் 4 மணி நேரம் அவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் பன்றியின் சிறுநீரகத்தை மருத்துவர்கள் பொருத்தியிருந்தனர். மருத்துவத்துறையில் இது முக்கிய மைல்கல் சாதனையாக பார்க்கப்பட்டது.



இந்நிலையில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இரண்டு மாத காலத்துக்குள் அவர் உயிரிழந்தார்.


உறுப்பு மாற்று சிகிச்சையின் விளைவுதான் அவரது மரணத்துக்கு காரணம் என சொல்வதற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை என அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.



கடந்த 2018இல் அதே வைத்தியசாலையில் அவருக்கு சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் 5 ஆண்டுகளில் அது செயலிழந்துள்ளது. அதன் காரணமாக அவருக்கு உடல் ரீதியான பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து டயலஸிஸ் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த மார்ச் மாதம் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது.



கடந்த 2022இல் அமெரிக்காவின் மேரிலேண்ட் வைத்தியசாலையில் பன்றியின் இதயம் நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது. அவரும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இரண்டு மாத காலத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக்கொண்ட நபர் இரண்டு மாதங்களில் உயிரிழப்பு உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக்கொண்ட நபர் இரண்டு மாதங்களில் உயிரிழப்பு Reviewed by Madawala News on May 13, 2024 Rating: 5

இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் - சஜித் பிரேமதாசவும் களத்தில்



இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் போராட்டமொன்று கொழும்பில் இன்று நடைபெற்றது.


எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம். மரிக்கார் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கொள்ளுப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதை காணமுடிந்தது.

“நிறுத்து! #காசாவில் இனப்படுகொலையை நிறுத்து " போன்ற பதாகைகளை ஏந்தி போராட்டம் நடைபெற்றது

இப்போராட்டம் இலங்கையில் சுதந்திர பாலஸ்தீன நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் - சஜித் பிரேமதாசவும் களத்தில் இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் - சஜித் பிரேமதாசவும் களத்தில் Reviewed by Madawala News on May 13, 2024 Rating: 5

அப்பாவி பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் ; அசாத்சாலி வேண்டுகோள்



 அப்பாவி பலஸ்தீனர்களை யுத்தக் கேடயங்களாகப் பாவிக்கும் இஸ்ரேலின் போக்குகளை ஆழமாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ள தேசிய ஐக்கிய முன்னணி, இதை சர்வதேசம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

காசாவில் ஏற்பட்டுள்ள கொடிய அவலங்கள் குறித்து தேசிய ஐக்கிய முன்னணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


காசாவில் ஏற்பட்டுள்ள யுத்த அவலங்கள் சர்வதேச நடைமுறைகளை மீறியுள்ளன. யுத்த தர்மங்களை மீறி இஸ்ரேல் கட்டவிழ்த்துள்ள வெறியாட்டம், பலஸ்தீனத்தை எரிந்த தேசமாக மாற்றும் வக்கிர நோக்கம்கொண்டது. சர்வதேசத்தின்  பார்வைகள் இவ்விடயத்தில் பாரபட்சமாக உள்ளன.


ரபா எல்லையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள இஸ்ரேல், அப்பாவி பலஸ்தீனர்களை யுத்தக் கேடயங்களாகப் பாவிக்கிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க இயலாது. ரபா எல்லையைக் குறிவைத்து இஸ்ரேல் ஆரம்பித்துள்ள இராணுவ நடவடிக்கைகளால் மே 10இல் 110000 பேர் தப்பியோடியுள்ளனர். மேலும், ஒக்டோபர் 07இல் தொடுக்கப்பட்ட இஸ்ரேலின் இராணுவ நடிக்கைகளால் இதுவரை 2.2 மில்லியன் மக்கள் பலவந்தமாக வெளியேற நேரிட்டுள்ளது.


சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட பலஸ்தீனத்தின் ஆள்புல எல்லைக்குள் இஸ்ரேல் அத்துமீறியுள்ளமை, பிற நாட்டின் மீதான ஆக்கிரமிப்பே! சர்வதேச நியதிகளை புறந்தள்ளியுள்ள இச்செயற்பாடுகளை கண்டிப்பதற்கு மேலைத்தேயம் தயங்குவது ஏன்? சிவிலியன்களை கொன்றுகுவிக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கு இந்நாடுகள் இன்னும் உதவியளிப்பது வேதனைக்குரியது.

இவ்வாறு நடந்துகொள்ளும் சியோனிஸ அரசை தண்டிப்பதற்கு கீழ் கண்ட விடயங்களை ஐ.நா. அவசரமாகச் செய்ய வேண்டும் எனவும் தேசிய ஐக்கிய முன்னணி ஆலோசனைகளை  முன்வைத்துள்ளது.


இஸ்ரேலுக்கான ஆயுத மற்றும் யுத்த தளவாடங்களை நிறுத்துதல், காசாவின் வான்பரப்புக்களில் விமானங்கள் பறப்பதற்கு தடைவிதித்தல், இஸ்ரேலுடனான ராஜதந்திர உறவுகளைப் பகிஷ்கரித்தல் மற்றும் விளையாட்டு, கலாசார உறவுகளிலிருந்து இஸ்ரேலை தனிமைப்படுத்தல். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் ; அசாத்சாலி வேண்டுகோள்  அப்பாவி பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் ; அசாத்சாலி வேண்டுகோள் Reviewed by Madawala News on May 13, 2024 Rating: 5

பயணம் செல்வதாக முச்சக்கர வண்டிகளில் ஏறிச்சென்று சாரதிகளை அச்சுறுத்தி கொள்ளையடித்து வந்த நபர் சிக்கினார்.



 வாடகைக்கு செல்வதாக கூறி முச்சக்கர வண்டிகளில் ஏறி சாரதிகளை அச்சுறுத்தி கொள்ளையடித்து வந்த நபர் ஒருவர் அங்குலான பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர் 02 முச்சக்கர வண்டிகள், 02 கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என  ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பயணம் செல்வதாக முச்சக்கர வண்டிகளில் ஏறிச்சென்று சாரதிகளை அச்சுறுத்தி கொள்ளையடித்து வந்த நபர் சிக்கினார். பயணம் செல்வதாக முச்சக்கர வண்டிகளில் ஏறிச்சென்று சாரதிகளை அச்சுறுத்தி கொள்ளையடித்து வந்த நபர் சிக்கினார். Reviewed by Madawala News on May 13, 2024 Rating: 5

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்தவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி .



 தாமரை கோபுரத்தில் பாய்ச்சல் நிகழ்வை அனுபவிக்கும் போது வெளிநாட்டவர் ஒருவர் கீழே விழுந்ததில் காயம் அடைந்தார்.


சற்று முன்னர் தாமரை கோபுரத்தில் பேஸ் ஜம்ப் போட்டியில் கலந்து கொண்ட வெளிநாட்டவர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

கோபுரத்தில் இருந்து குதித்த பின்னர் குறித்த வெளிநாட்டவர் தனது பரசூட்டை இயக்குவதில் தாமதித்ததாக சம்பவத்தைநேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.


காயமடைந்த வெளிநாட்டவர் உடனடியாக பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்தவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி . தாமரை கோபுரத்தில் இருந்து குதித்தவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி . Reviewed by Madawala News on May 13, 2024 Rating: 5

VIDEO : ருமேனியாவில் வேலைக்கு செல்ல 7 முதல் 10 இலட்சம் பணம் செலுத்திய 128 பேர் - ஏஜென்சிகாரர் எஸ்கேப்



 ருமேனியாவில் வேலை வாய்ப்பை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்ட நீர்கொழும்பு பகுதியில் இயங்கி வரும் வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் முன்பாக நேற்று (12) பதற்றமான சூழல் ஏற்பட்டது.

128 இளைஞர்கள் தலா 7 முதல் 10 இலட்சம் ரூபா வரை பணம் இந்த வேலை வாய்ப்பிற்காக பணம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் நேற்று வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்திற்கு முன்பாக திரண்டனர்.

அங்கு அவர்கள் ஊடகங்ளிடம் கருத்து தெரிவிக்கையில்

நான் வாத்துவையில் இருந்து வந்தேன்.. ருமேனியா செல்வதற்காக 7.45 லட்சம் ரூபாய் கொடுத்தேன். இதேபோன்று 120 பேர் இங்கே வந்துள்ளனர். நாளை நேர்முகத்தேர்வுக்கான திகதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று அழைத்து அனைத்தும் இரத்து செய்யப்பட்டதாக கூறினர். ஒரு பாரிய மோசடியாகும்" என்றனர்.

VIDEO : ருமேனியாவில் வேலைக்கு செல்ல 7 முதல் 10 இலட்சம் பணம் செலுத்திய 128 பேர் - ஏஜென்சிகாரர் எஸ்கேப் VIDEO :  ருமேனியாவில் வேலைக்கு செல்ல  7 முதல் 10 இலட்சம்  பணம் செலுத்திய 128 பேர் -  ஏஜென்சிகாரர் எஸ்கேப் Reviewed by Madawala News on May 13, 2024 Rating: 5

தேவஹூவ கிராமத்தின் முதலாவது சட்டத்தரணியாக நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்ரா உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம்.


( ஐ. ஏ. காதிர் கான் )

   தேவஹூவ - புலனவெவ கிராமத்தைச் சேர்ந்த திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்ரா, இலங்கை சனநாயக சோசலிஷக் குடியரசின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக, உயர்  நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில், (2024.05.06) திங்கட்கிழமை  சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

   தேவஹூவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பயின்ற இவர், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவப் பீடத்திற்குத் தெரிவானார். 

   இவர் அங்கு ஆங்கில மொழி மூலம் வாயிலாக,  முகாமைத்துவமும் தகவல் தொழிநுட்பப் பிரிவில் "விஞ்ஞானமாணி" (BSE IN MIT) பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

   மேலும், ஆங்கில மொழி ஊடாக சிறப்புச் சித்தி பெற்று "சிறப்புச் சட்டமாணி" என்ற பட்டத்தையும் [LLB(Hons)] சூட்டிக்கொண்டார்.

   சட்டக் கல்லூரியினால் நடாத்தப்படும், சட்டத்தரணிகளுக்கான இறுதிப் பரீட்சையிலும் தோற்றி  சித்தியடைந்துள்ள பாத்திமா நிஸ்ரா, தேவஹூவ கிராமத்தின் முதலாவது சட்டத்தரணியாகத் தேர்வாகி, தனது கிராமத்திற்கும் தனது பெற்றோருக்கும் பேரும் புகழும் சேர்த்துள்ளார். அத்துடன், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனிடம் இதற்கான ஆரம்பப் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டதையும் இவர், நன்றியுடனும் பெருமையுடனும் நினைவு கூர்ந்துள்ளார்.

   இளம் வயதிலேயே சட்டத்தரணியாக புகழ் நாமம் சூட்டிக்கொண்ட இவர், தேவஹூவவைச் சேர்ந்த நிஸ்வர்தீன் - நிஸ்பா தம்பதியினரின் மூன்றாவது புதல்வியுமாவார்.

   திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்ராவின் மூத்த சகோதரிகளான திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்கா, திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்திகா ஆகியோர், தேவஹூவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியைகளாகப் பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


( ஐ. ஏ. காதிர் கான் )

தேவஹூவ கிராமத்தின் முதலாவது சட்டத்தரணியாக நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்ரா உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம். தேவஹூவ கிராமத்தின் முதலாவது சட்டத்தரணியாக நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்ரா  உயர்  நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம். Reviewed by Madawala News on May 13, 2024 Rating: 5

நான் ஜனாதிபதியாக ஆட்சி செய்த போது எந்த அரச வளங்களையும் விற்பனை செய்யவில்லை - எமது பொருளாதார முகாமைத்துவத்தினால் ஒன்பது ஆண்டுகாலமாக நாட்டின் பொருளாதாரம் சீராக வளர்ச்சியடைந்தது ; மகிந்த



(இராஜதுரை ஹஷான்)


ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து புதிய அரசாங்கம் ஒன்று தோற்றம் பெறும் வரை அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கும்,தனியார் மயப்படுத்தவும் முன்னெடுத்துள்ள சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முழுமையாக இடைநிறுத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் தரப்புக்கு கிடைக்கப் பெறும் மக்களாணைக்கு அமைய அரச சொத்துக்கள் மற்றும் வளங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.


அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில் விசேட ஊடக அறிக்கை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


அரசுக்கு சொந்தமான ஒருசில சொத்துக்கள் மற்றும் வியாபாரங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளால் தொழிற்சங்கங்கள்,அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் முரண்பாடற்ற தன்மை நிலவுகிறது. நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கான செலவுகளை குறைத்துக் கொள்ளதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காகவும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.


2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதியாக ஆட்சி செய்த போது எந்த வளங்களையும் நான் தனியார் மயப்படுத்தவில்லை,விற்பனை செய்யவுமில்லை.எனக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தனியார் மயப்படுத்திய ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம்,ஸ்ரீ லங்கா ஹொஸ்பிடல் என்பனவற்றை மீண்டும் அரசுமடையாக்கினேன்.இந்த நிறுவனங்கள் இன்றும் இலாபமடைகின்றன.


அரச சொத்துக்கள் மற்றும் வியாபாரம் தொடர்பில் எனது அரசாங்கத்தின் கொள்கை முற்போக்கான நிலையில் காணப்பட்டது.ஏதேனும் அரச நிறுவனம் இலாபமடைந்து மக்களுக்கு சிறந்த சேவை வழங்குமாயின் அவற்றை தனியார் மயப்படுத்த வேண்டிய தேவை கிடையாது.ஒருசில வேளை பொருளாதார மேட்பாட்டுக்காகவும்,குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் அரச நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் ஒருசில உற்பத்திகள் மற்றும் சேவைகளின் விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் மூலோபாய செயற்பாடுகளை முன்னெடுத்தது.மின்சாரத்துறை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.


விலைக்கட்டுப்பாட்டினால் அரச நிறுவனங்கள் நட்டமடைந்த போதிலும் எமது பொருளாதார முகாமைத்துவத்தினால் ஒன்பது ஆண்டுகாலமாக பொருளாதாரம் சீராக வளர்ச்சியடைந்தது.அக்காலப்பகுதியில் கடன் செலுத்தவும்,நலன்புரி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.இக்காலப்பகுதியில் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது குறித்து எவரும் பேசவில்லை.


தனியார் மயப்படுத்தல் விடயத்தில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மாறுப்பட்ட தன்மையில் காணப்படுகிறது.தனியார் மயப்படுத்த கூடிய அனைத்தையும் விற்பனை செய்ய முயற்சிக்கப்படுகிறது.பெரும்பாலான தொழிற்சங்கங்கள் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்து தமது நிலைப்பாட்டை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளன.


முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் இடைக்கால பதவி காலத்தை நிறைவுப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.இவ்வாறான நிலையில் அரச சொத்துக்களை அவசர அவசரமாக விற்பனை செய்தால் நாட்டுக்கு சிறந்த மற்றும் நிலையான பயன் ஏதும் கிடைக்காது.


ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளன.இவ்வாறான நிலையில் அரச சொத்துக்களை விற்பதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் தோற்றம் பெற்றுள்ளன.ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் புதிய அரசாங்கம் தோற்றம் பெறும் வரை அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கும்,தனியார் மயப்படுத்தவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள சகல நடவடிக்கைகளையும் முழுமையாக இடைநிறுத்த வேண்டும் என்பது எனது யோசனையாக காணப்படுகிறது.


ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் தரப்பு அவர்களுக்கு கிடைக்கப் பெறும் மக்களாணைக்கு அமைய அரச சொத்துக்கள் மற்றும் வளங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

நான் ஜனாதிபதியாக ஆட்சி செய்த போது எந்த அரச வளங்களையும் விற்பனை செய்யவில்லை - எமது பொருளாதார முகாமைத்துவத்தினால் ஒன்பது ஆண்டுகாலமாக நாட்டின் பொருளாதாரம் சீராக வளர்ச்சியடைந்தது ; மகிந்த நான் ஜனாதிபதியாக ஆட்சி செய்த போது எந்த அரச வளங்களையும் விற்பனை செய்யவில்லை -  எமது பொருளாதார முகாமைத்துவத்தினால் ஒன்பது ஆண்டுகாலமாக நாட்டின் பொருளாதாரம் சீராக வளர்ச்சியடைந்தது ; மகிந்த Reviewed by Madawala News on May 13, 2024 Rating: 5

VIDEO >> பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ரேஸ் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு அழகான பெண் வேடமணிந்த ஆண் பரிசு - 14 இளைஞர்கள் கைது



 மஹரகமை - டேங்கோ போர்ட் சந்தியிலிருந்து பன்னிபிட்டிய நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்களை மஹரகமை பொலிஸார் நேற்று  (12) கைது செய்துள்ளனர்.


இது ஒரு பந்தயப் போட்டி என்றும், இணையத்தில் வெளியான செயலி மூலம் அவர்கள் இதில் இணைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.


போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு மேலதிகமாக அழகான பெண் வேடமணிந்த இளைஞர் ஒருவரும் வழங்கத் தயார் நிலையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.


போட்டியில் பயன்படுத்தப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

VIDEO >> பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ரேஸ் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு அழகான பெண் வேடமணிந்த ஆண் பரிசு - 14 இளைஞர்கள் கைது VIDEO >> பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ரேஸ் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு அழகான பெண் வேடமணிந்த ஆண் பரிசு - 14 இளைஞர்கள் கைது Reviewed by Madawala News on May 13, 2024 Rating: 5

வளிமண்டலவியல் இடையூரின் காரணமாக நாட்டில் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்.



இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற வளிமண்டலவியல் இடையூரின் காரணமாக அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ,மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மற்றும் தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களில் சில இடங்களில காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
****************************

திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு, பொத்துவில் ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

மொஹமட் சாலிஹீன்,  
சிரேஸ்ட வானிலை அதிகாரி
வளிமண்டலவியல் இடையூரின் காரணமாக நாட்டில் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வளிமண்டலவியல் இடையூரின் காரணமாக நாட்டில் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். Reviewed by Madawala News on May 13, 2024 Rating: 5

வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களால் இவ்வருடம் முதல் 4 மாதங்களில் மட்டும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்தது.



புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகளவான பணத்தினை சட்டரீதியான வங்கி முறையில் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் புலம்பெயர் தொழிலாளர்கள், சுமார் 543 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இது 11.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் ​​ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்த நாட்டிற்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்ட தொகை 19.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது
வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களால் இவ்வருடம் முதல் 4 மாதங்களில் மட்டும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்தது. வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களால் இவ்வருடம் முதல் 4 மாதங்களில் மட்டும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்தது. Reviewed by Madawala News on May 12, 2024 Rating: 5

தொல்பொருட்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபர் கைது - புத்தளம் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைப்பு



கற்பிட்டி - ஆலங்குடா பகுதியில் வீடொன்றிலிருந்து , சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் , தங்கத்தலானது என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி, ஏத்தாளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான விஜய கடற்படையினரும், புத்தளம் பிரிவு குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளும் இணைந்து குறித்த பகுதியில் விஷேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்ட நிலையில் வீடொன்றினை சோதனை செய்த போது, அந்த வீட்டிற்குள் சட்டவிரோதமாக பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்கள் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதன்போது ,தங்கத்தில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாள் ஒன்றும், ஆமை , குதிரை மற்றும் இரண்டு சிறிய சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், பறிமுதல் செய்யப்பட்ட தொல்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர் .

ரஸீன் ரஸ்மின்
தொல்பொருட்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபர் கைது - புத்தளம் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைப்பு தொல்பொருட்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபர் கைது - புத்தளம் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைப்பு Reviewed by Madawala News on May 12, 2024 Rating: 5

ட்ரோன் தொழில் நுட்ப முறை மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் கிண்ணியா விவசாயிகள்



ஹஸ்பர் ஏ.எச்_

முதன் முறையாக கிண்ணியா விவசாயிகள் ட்ரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தங்களது நெற் பயிர்ச் செய்கைகளுக்கு கிருமி நாசினியை விசிரினர். கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட பீங்கான் உடைந்தாரு,வன்னியனார் மடு விவசாய நிலத்தில் கலை கொள்ளிகளை இன்று (12) விசிரினர். ட்ரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முதன் முறையாக இதனை முன்னெடுத்ததாகவும் இதன் மூலம் புதிய அனுபவம் பயிற்சிகளை பெற்றதாகவும் அப் பகுதி விவசாய சம்மேளன ஊடக பேச்சாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.
பல ஏக்கர் வயல் நிலங்களுக்கு நெற் செய்கையின் போது சிறந்த அறுவடை இதன் மூலம் கிடைக்கப் பெறவும் இலகுவாகவும் புதிய தொழில் நுட்பம் ஊடாக முன்னெடுப்பது இதுவே முதன் முறையாகும் என்பது கிடைக்கத்தக்கது.
ட்ரோன் தொழில் நுட்ப முறை மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் கிண்ணியா விவசாயிகள் ட்ரோன் தொழில் நுட்ப முறை மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் கிண்ணியா விவசாயிகள் Reviewed by Madawala News on May 12, 2024 Rating: 5

பசுக்களை கொல்வதற்கு எதிராக ஆர்பாட்டம்



இலங்கை சிவசேனை சிவத் தொண்டர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பசுக்கொலைக்கு ஏதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை 09.30 மணிக்கு இலங்கை சிவசேனை தலைவர் மூதறிஞர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தலைமையில் நடைபெற்றது.


காசாவுக்கு ஒரு நீதியா?இந்துக்களுக்கு இன்னொரு நீதியா?

நிறைவேற்று நிறைவேற்று 
பசுவதைதடைச் சட்டத்தினை நிறைவேற்று, இலங்கை சிவபூமி 

முகமதியரே புனித சின்னத்தினை சிதைக்காதீர், 


பொஸிசாரே, பொஸிசாரே பசுத்திருடர்களை கைது செய், 

பசுக்கள் மீதும் இறை
தூதர்கள் மீதும் 
கைவைத்தால்
அழிவாய், 

அறுக்காதே அறுக்காதே கோமாதாவினை அறுக்காதே,

 கோமாதாவினை வெட்டி இந்து சமயத்தவர்களின் மனதில் ஈட்டிபாய்ச்சாதே? 


என்ற பாததைகள் ஏந்திய வண்ணம் கோசங்கள் இட்டு தமது எதிர்ப்பு போட்டத்தினை முன்னெடுத்தனர்.


இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமது ஆதரவினை வழங்க சிவபூமி அறக்கட்டளை தலைவரும், தெல்லிப் பளை துர்க்கா தேவஸ்தான தலைவரும் ஆகிய கலாநிதி ஆறு. திருமுருகன், யாழ்ப்பாணம் மத்தியஸ்தான நாகவிகாரை விகாராதிபதி விமலரத்தன தேரர், இந்து சமயப்பேரவையின் தலைவர் சக்தி கீரிவன் மற்றும் இலங்கை சிவசேனை சிவத்தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு தமது பசுக்கொலைக்கு ஏதிராக தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

பு.கஜிந்தன்
பசுக்களை கொல்வதற்கு எதிராக ஆர்பாட்டம் பசுக்களை கொல்வதற்கு எதிராக ஆர்பாட்டம் Reviewed by Madawala News on May 12, 2024 Rating: 5

மின்னல் தாக்கத்தினால் முற்றாக சேதமடைந்த வைத்தியசாலை - சுமார் 50 மில்லியன் ரூபாவரை பொருள்சேதம்



வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) கடும் மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் முற்றாக சேதமடைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற மின்னல் தாக்கத்தினால் வைத்தியசாலையில் இருந்த அனைத்து மின் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதுடன், மின்னல் தாக்கத்தினால் கட்டிடமும் சேதமடைந்துள்ளது.



விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (11) வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.

மின்னல் தாக்கத்தால் ETU க்கு ஏற்பட்ட சேதங்கள் சுமார் ரூ. 50 மில்லியன் ஆகுமென அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று (11) தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய அமைச்சர், இந்த அவசர சிகிச்சைப் பிரிவை புனரமைப்பதற்கு பணம் ஒதுக்கப்படும் எனவும், ஆளுநர் இன்று வைத்தியசாலையை பார்வையிடுவார் எனவும் தெரிவித்தார்.

மின்னல் தாக்கத்தின் போது பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று நோயாளர்கள் காயமடையவில்லை. எவ்வாறாயினும், மின்னல் தாக்கத்தின் பின்னர் தீ பரவியமையினால் நோயாளிகளை வெளியேற்ற பெரும் முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருந்ததாக வைத்தியசாலை ஊழியர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
மின்னல் தாக்கத்தினால் முற்றாக சேதமடைந்த வைத்தியசாலை - சுமார் 50 மில்லியன் ரூபாவரை பொருள்சேதம் மின்னல் தாக்கத்தினால் முற்றாக சேதமடைந்த வைத்தியசாலை - சுமார் 50 மில்லியன் ரூபாவரை பொருள்சேதம் Reviewed by Madawala News on May 12, 2024 Rating: 5

வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது.



க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கண்டியில் வைத்து இன்று (12) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது. வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது. Reviewed by Madawala News on May 12, 2024 Rating: 5

நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பலவும் இன்று எமது ஐக்கிய மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சுகின்றன



(எம்.மனோசித்ரா)

நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பலவும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சுகின்றன. எனவே, அவை அனைத்தும் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால் எந்தவொரு சதித்திட்டத்துக்கும் மக்கள் ஏமாறப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை (11) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டிறுதியில் பொது மக்கள் யுகம் உருவாகும். எம்மைப் பற்றி சிந்தித்து அனைவரும் அச்சமடைந்துள்ளனர். மொட்டு, யானை, திசைக்காட்சி என அனைவரும் எம்மைக் கண்டு அஞ்சுவதால் அவர்கள் அனைவரும் இணைந்து எமக்கெதிராக சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். எந்தவொரு சதித்திட்டத்தாலும் 220 இலட்சம் மக்களை ஏமாற்ற முடியாது.

அதிகாரம் எதுவுமின்றி பல சேவைகளை நாட்டுக்கு செய்யும் ஒரேயொரு எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே. அதே போன்று தற்போது வழங்கும் சகல வாக்குறுதிகளையும் எமது ஆட்சியில் நிச்சயம் நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கின்றேன். புதிய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை அடுத்த மட்டத்துக்கு எடுத்துச் செல்வோம்.

விவசாயிகளின் பயிர்செய்கைக்கான ஸ்திர விலை நிர்ணயிக்கப்படும். அதேபோன்று விவசாயிகளுக்கான ஓய்வூதிய முறைமையையும் நாம் மறக்கவில்லை. இவ்வாண்டிறுதிக்குள் விவசாயிகளுக்கான ஓய்வூதிய முறைமையை நடைமுறைப்படுத்துவோம். யானை - மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும். விவசாயிகளின் விவசாய நிலத்துக்கான உரிமம் வழங்கப்படும்.

சஜித் பிரேமதாச எந்தவொரு நாட்டுக்கும் அடிபணிய மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே போன்று வர்த்தக நிறுவனங்களால் என்னை விலைக்கு வாங்கவும் முடியாது. எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துக்கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவோம் என்றார்.


நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பலவும் இன்று எமது ஐக்கிய மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சுகின்றன நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பலவும் இன்று எமது ஐக்கிய மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சுகின்றன Reviewed by Madawala News on May 11, 2024 Rating: 5
Powered by Blogger.